Home இலங்கை வெளிநாடுகளுக்குத் தப்பிய 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு மீள அழைப்பு! சொத்துக்கள் முடக்கம்

வெளிநாடுகளுக்குத் தப்பிய 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு மீள அழைப்பு! சொத்துக்கள் முடக்கம்

0
image

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்த 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிங்கள அரச ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி, குறித்த சந்தேகநபர்களுடன் தொடர்புடைய 113 வழக்குகளின் விசாரணைகளின் அடிப்படையில், 6,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

இதில், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான  5,423  மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவருக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அடங்குகின்றன.

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு பேருக்குச் சொந்தமான  367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 1,404 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் உள்ளடங்குகின்றன.

இலங்கைக்கு மீள அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புகள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்படவில்லை.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களை வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்துவதை இலகுவாக்கும் வகையில், 2024 செப்டெம்பர் முதல் இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட மொத்த சிவப்பு அறிவிப்புகளின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கான 96 அறிவிப்புகளும் அடங்குகின்றன.

மேலும், சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட சந்தேகநபர்களில் 35 பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 18 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 11 பேர் இந்தியாவிலும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவர் வசிப்பதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

Source: https://samugammedia.com/66-suspects-who-fled-abroad-are-being-called-back-to-sri-lanka-assets-frozen-1788174645

NO COMMENTS

Exit mobile version