Home இலங்கை சமூகம் யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் : விதிக்கப்பட்டுள்ள உத்தரவு

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் : விதிக்கப்பட்டுள்ள உத்தரவு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஒன்பது உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது , சுகாதார சீர்கேட்டுடனும் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் ஐந்து இனம் காணப்பட்டுள்ளன.

 

சுகாதார நடைமுறை

அவற்றுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தொடரப்பட்ட போது உணவு கையாளும் நிலையங்களின் ஐந்து உரிமையாளர்களும் நீதிமன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களை எச்சரித்த நீதிமன்றம், ஐவருக்கும் 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் அதேவேளை பருத்தித்துறை நகர சபை ஆளுகைக்குள் உட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகவும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

நான்கு உரிமையாளர்கள்

இதன்போது, உணவு கையாளும் நிலையங்களின் நான்கு உரிமையாளர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த நீதிமன்றம் அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத உணவு கையாளும் நிலைய உரிமையாளருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் சமூகமளிக்குமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version