Home இலங்கை அரசியல் தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

தலைமைப் பதவியை துறந்தது ஏன்..! மனம் திறந்தார் மாவை

0

இலங்கை தமிழரசுக் கட்சியின்(itak) தலைமைப் பதவியில் இருந்து தான் ஏன் விலகினேன் என்பதற்கான காரணத்தை மாவை சேனாதிராசா(mavai senathirajah) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா(kv.thavarasa) தலைமையிலான தரப்பினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் தனது பதவி விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளமை வருமாறு,

தலைமைப் பொறுப்பினை துறந்தேன்

கட்சியில் எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன். எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கான வலுவான சக்தியாக மாற்றுவதற்காக பணியாற்றவுள்ளதாக குறிப்பிட்டார்.

என்னைப் பொறுத்தவரை என்னால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தால் நான் பதவியில் இருந்து விலகினேன். இருப்பினும் நான் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுவேன்.

அதேநேரம், கட்சியில் இருந்து பலர் வெளியேறி வெவ்வேறு தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கின்ற கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.இந்த நிலைமையானது எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

எனினும் அவர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய சிந்தனையில் உள்ள தளத்தில் பயணிப்பதால் சற்று நிம்மதியாகவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் எடுக்கப்போகும் நடவடிக்கை

எவ்வாறாயினும் இந்த தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறாகப் போட்டியிடுகின்றவர்கள், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் என்று அனைவரையும் ஒன்றிணைக்கின்ற பணியை நான் தேர்தலின் பின்னர் முன்னெடுக்கவுள்ளேன்.

அவ்விதமான எனது செயற்பாடானது எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தில் முக்கியமானதாக இருக்க முடியும் என்றே கருதுகின்றேன்.

அந்தப் பணியை நான் நிச்சயமாக தொடருவேன்.

கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிளவுகள் களையப்பட வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களையும் கட்சியுடன் இணைத்துப் பயணிக்க வேண்டியது அவசியமாகும். எனவே அதற்காக தேர்தலின் பின்னர் நிச்சயமாக செயற்படுவேன் என்றார்.

NO COMMENTS

Exit mobile version