Home இலங்கை 10 வயது சிறுவனிடம் அதிக கட்டணம் வசூல்: போக்குவரத்து சங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

10 வயது சிறுவனிடம் அதிக கட்டணம் வசூல்: போக்குவரத்து சங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

0
image

வடமராட்சி கிழக்கு பகுதியில் பேருந்து கட்டண விதிமுறைகளை மீறி, 10 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனிடம் பெரியவர்களுக்கான முழு கட்டணத்தை வசூலித்த தனியார் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார காலம் பணித்தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடத்தனையிலிருந்து மருதங்கேணி நோக்கிப் பயணித்த 10 வயது சிறுவனிடம், வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கம் மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியவை நிர்ணயித்துள்ள கட்டண விதிகளை மீறி, அந்நடத்துனர் முழுத் தொகையையும் கட்டணமாக அறவிட்டுள்ளார்.

சிறுவனின் தந்தை இது குறித்து வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி சிறுவனிடம் அதிக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பேருந்து நடத்துனர் இனிவரும் ஒரு வார காலத்திற்குப் பேருந்து நடத்துனர் பணியில் ஈடுபடுவதற்கு வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இதுவொரு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/excess-fare-charged-to-10-year-old-boy-transport-association-takes-swift-action-1785855213

NO COMMENTS

Exit mobile version