முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்துகம பொது விளையாட்டரங்கில் நேற்று (18) அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போதும் விடுதலைப் புலிகள் பாடசாலைகளை மூட அனுமதிக்கவில்லை.
ஆசிரியர்கள் வடிகால்களை வெட்டி பீப்பாய்களுக்குள் வைத்து குழந்தைகளுக்கு கற்பித்தார்கள்.
தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.
இலவசக் கல்விக்கு பாரிய களங்கம்
பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நாட்டில் 10,000 பாடசாலைகளை மூடியதுதான் இவர்களின் செயற்திறமையாகும் என அமைச்சர் தெரிவித்தார்.