பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் (S.Sridharan) தெரிவித்துள்ளார்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளமானது தேர்தல் கால வாக்குறுதியாக
இருந்து விடக்கூடாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவும் வருகை மற்றும்
ஊக்குவிப்பு கொடுப்பனமாக 350 ரூபாவும் வழங்குவதற்கு சம்பளம் நிர்ணய சபையின்
ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்
இந்தத் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது ஆட்சேபனையைத்
தெரிவிக்கலாம் எனவும் தொழிற் திணைக்களம் அறிவித்துள்ள அதேவேளை 1350 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க முடியும் என்று தோட்ட
முதலாளிமார் சம்மேளனமும் அறிவித்துள்ளது.
மேலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது
என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆட்சேபனைத் தெரிவித்து
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் தெரிய வருகின்றது.
மேலும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த சில
தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்திற்காக தொடர்ந்து
குரல் கொடுப்பதாகவும் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளன.
தேர்தல் கால வாக்குறுதி
இந்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு குழு ஒன்றும் சம்பள நிர்ணய சபையின்
தீர்மானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்
என்றும் அறிவித்துள்ளது.
ஆகவே இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700
ரூபாய் சம்பளம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இந்தப் புதிய சம்பள திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்
தோட்டத் தொழிலாளர்களின் செப்டம்பர் மாதச் சம்பள பட்டியலில் உள்ளடக்கும்
வகையில் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆகவே தோட்டத் தொழிலாளருக்கான 1700 ரூபாய் சம்பளம் விடயமானது தேர்தல் கால
வாக்குறுதியாக இருந்துவிடக் கூடாது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது
தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்யப்படுகின்ற மேலுமொரு அநீதி ஆகும் என சோ.
ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.