எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களர்கள் தமது விருப்பத்தை எவ்வாறு சரியாகக் குறிப்பிடுவது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு, வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும் எனவும் ‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களை குறியிட்டு, தனக்கு விருப்பமான மற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை அளிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தபால் மூல வாக்குகள்
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி 21ஆம் திகதி மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும் என்றும், எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரதான வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காவல்துறையினர் நடவடிக்கை
இதேவேளை இன்று (19) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் அகற்றுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகமும், பழைய ஆசனத்திற்கு ஒரு அலுவலகமும் மாத்திரமே திறக்கப்பட முடியும் என கூறியுள்ளார்.
முன்னர் நிறுவப்பட்ட மற்றைய அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த வேட்பாளர்கள் அகற்ற வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் காவல்துறையினரால் அகற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.