2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (DoE) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என்றும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை தொடரும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ள 345,525 பரீட்சார்த்திகளில் 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,004 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குவர்.
பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள்
பரீட்சையை சுமூகமாக நடத்துவதற்கு வசதியாக நாடு முழுவதும் 325 பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களும் 32 வினாத்தாள் சேகரிப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பரீட்சைக் காலத்தில் பாதகமான வானிலை அல்லது இயற்கை பேரழிவுகளால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.
எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படும் பேரிடர் சூழ்நிலைகளால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/2025-a-l-exam-to-begin-tomorrow-examination-dept-1762661963
