நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இன்று (07) பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு உரையை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
2ஆவது வரவு செலவுத் திட்டம்
2026ஆம் ஆண்டில் மொத்த அரசாங்கச் செலவு ரூபா 4,434 பில்லியன் ஆகும்.
வரவிருக்கும் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு மசோதாவில் ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சகத்திற்கு ஆகும், இது 634 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்திற்கு ரூபா 554 பில்லியனும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூபா 455 பில்லியனும், கல்வி அமைச்சகத்திற்கு ரூபா 301 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் பார்வையிட்டார்.
இன்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பிறகு, வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது.
அதன்பிறகு, மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை நடைபெற உள்ளது.
மேலும் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
