வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் பெறுமதி சேர் வரி (VAT) தற்போதைய 18% இலிருந்து 20-21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardana)தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையானது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால் அதனை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை எனவும் மஹிந்த சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை
தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று(08) நடைபெற்ற கூட்டத்தில், இந்த ஆண்டு சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், 2025 வரவுசெலவுத் திட்டத்தில், சம்பள ஏற்றத்தாழ்வுகள் குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிபர் ஊடகப் பிரிவின்படி (PMD) ,அதிபர் விக்ரமசிங்க தலைமையில் இன்று அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திறைசேரி செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘சுகவீன விடுப்பு’ தொழிற்சங்க நடவடிக்கை
200க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் இன்று (8) மற்றும் நாளை (9) இரண்டு நாட்கள் ‘சுகவீன விடுப்பு’ தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ள நிலையிலேயே மஹிந்த சிறிவர்தனவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தில் தபால் ஊழியர்கள், நில அளவையாளர்கள், விவசாய ஒழுங்குமுறை அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வளசரவாக்க உத்தியோகத்தர்கள் உட்பட பல துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.