அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இரகசியத் தீர்ப்பு இன்னும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதிக்கு அந்தத் தீர்ப்பு முன்கூட்டியே எவ்வாறு தெரியும்?” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
22 ஆவது திருத்தத்துடன் நீதிமன்றச் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து வாசிக்க வேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் இந்தத் திருத்தங்கள், நீதித்துறையின் சுயாதீனத்துக்கு மரண அடியைக் கொடுப்பதாக அமைந்துள்ளன.
இந்தத் திருத்தம் மக்கள் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாகில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும். ஆனால், இதனை நாடாளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி முன்கூட்டியே பிரஸ்தாபித்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் அவருக்கு இந்த இரகசியத் தீர்ப்பு எவ்வாறு தெரியும்?
நாட்டின் ஜனநாயகம் தற்போது பெலவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலை அர்த்தமற்ற முறையில் காலம் தாழ்த்தி வரும் அரசு, நாட்டில் தனிக் கட்சிக் ஆட்சியை உருவாக்கும் முறையை ஸ்தாபிக்க முற்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதும் ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்குவதாகும். எனவே, உயர்நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறும் அமைதிவழியிலான ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு முற்போக்குத் தரப்புகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். – என்றார்.
