Home இலங்கை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் இலந்தைக் குளம் ரூ.20.1 மில்லியன் ஒதுக்கீடு

40 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் இலந்தைக் குளம் ரூ.20.1 மில்லியன் ஒதுக்கீடு

0
image

நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதாக வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின் புனரமைப்புப் பணிகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(11) உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

“நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த இலந்தைக் குளத்தைச் செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள் நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறவுள்ளன.

இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும்.

தற்போது திருகோணமலை மாவட்டத்திலும், குச்சவெளி பிரதேசத்திலும் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இக்குளப் புனரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சிக்கு பெரும் வழிகோலும்” எனத் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகால அபிவிருத்தி எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்த இக்கோரிக்கைக்கு இப்புனரமைப்புப் பணியின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், இத்திட்டத்தினைத் துரிதமாக முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் என். விஸ்ணுதாசன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/ilanthai-kulam-to-be-renovated-after-40-years-rs-201-million-allocated-1786432246

NO COMMENTS

Exit mobile version