Home இலங்கை 40 லட்சம் பேர் இன்னும் TIN இலக்கத்தைப் பெறவில்லை: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்!

40 லட்சம் பேர் இன்னும் TIN இலக்கத்தைப் பெறவில்லை: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்!

0
image

நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ‘வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்’ (TIN Number) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 லட்சம் பேர் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாட்டில் சுமார் 17 மில்லியன் (1 கோடியே 70 லட்சம்) மக்கள் இந்த இலக்கத்தைப் பெற வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், இதுவரையில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் மாத்திரமே TIN இலக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது அன்றாட மற்றும் வணிக ரீதியிலான பல்வேறு தேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இந்த இலக்கம் இனி அவசியமானதாகும்:

புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் கடன் அட்டைகளை (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல்.

மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றைப் புதுப்பித்தல்.

புதிய வணிகங்களைப் பதிவு செய்தல்.

நிறுவனங்களின் பங்குகளைப் (Shares) பரிமாற்றம் செய்தல்.

இதேவேளை, நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத் திருத்தங்களுக்கு அமைய, வரி செலுத்துவோர் அடையாள இலக்கமானது (TIN) இனிமேலும் ஒரு இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, இதுவரை இந்த இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத தகுதியுடைய குடிமக்கள் அனைவரும், சட்ட சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு விரைந்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Source: https://samugammedia.com/40-lakh-people-still-havent-received-their-tin-number-department-of-inland-revenue-reports-1781487986

NO COMMENTS

Exit mobile version