2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டதாக பிரதி காவல் துறை மா அதிபர், காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (14) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கைதானவர்களில் கல்பிட்டி மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
பொதுத் தேர்தல்
இவர்களில் பெரும்பாலானவர்கள் முக்கியமாக சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பணம் கொடுத்தல், புகைப்படம் எடுத்தல், வாக்கு சீட்டுகளை கிழித்தல், தாக்குதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
அத்துடன், கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவரை அது தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
41 பேர் கைது
வாக்களிக்க வந்த ஒருவர் குறித்த உத்தியோகத்தரிடம் உதவி கேட்டபோது அவர் அதற்கு மாறாக, தவறாக நடந்து கொண்டதன் காரணமாக இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நபர்கள் மட்டுமே செல்ல முடியும்.
அனுமதி வழங்கப்பட்ட நபராக இருந்தாலும் குடிபோதையில் அந்த இடத்திற்கு செல்ல முடியாது.
அத்தோடு, கையடக்க தொலைபேசியை கொண்டுச் செல்ல முடியாது .
எந்த இடத்திலும் பெரிய டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை கூட்டாகப் பார்க்க முடியாது.
அப்படி நடந்தால், பாதுகாப்புப் படையினர் தலையிட்டு அந்த மக்களைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.