Home இலங்கை அரசியல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் : இலங்கை முன்வைக்கவுள்ள கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் : இலங்கை முன்வைக்கவுள்ள கோரிக்கை

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UN Human Rights Council) 58ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தொடரில் அந்த சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர் தனிமனித அடிப்படை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் சர்வதேச சட்டத்தையும் நடைமுறையையும் நினைவுபடுத்தியிருந்தார்.

மனித உரிமைகளை நிலைநாட்டல்

கடந்த 80 வருட காலமாக மனித உரிமைகளை நிலைநாட்டும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகவும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் தம்மாலான முயற்சிகளை செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

  

இதேவேளை குறித்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது.

இந்தக் குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நட்பு நாடுகளுடனான பிரதிநிதிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் 

மனித உரிமை பேரவையின் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான வரைவினை கடுமையாக எதிர்ப்பதற்கும், பேரவையின் 51/1 பிரேரணையை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிப்பதற்கும் தீர்மானித்ததற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்துள்ளது.

அதேநேரம், அமெரிக்கா விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 நகல்வடிவையும், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்க வைக்கும் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version