இலங்கை காவல் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது, நேற்று (15) இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு இந்தியா 80 கெப் ரக வாகனங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு
அத்துடன், இந்த வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் மற்றும் துணைக்கருவிகளும் வழங்கப்படவுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை காவல்துறையின் முக்கியத் தேவைக்கு இந்த ஒப்பந்தம் உதவுவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.