எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவு வழங்கிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 92 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், இந்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்புடும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்காது, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றமைக்கு எதிராகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த 92 பேரின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்துள்ள மக்கள் பிரதிநிதிகள் யார் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.