Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய முக்கிய உறுப்பினர் : வலுக்கும் உட்கட்சி மோதல்

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய முக்கிய உறுப்பினர் : வலுக்கும் உட்கட்சி மோதல்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்
முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும்
எருவில் வட்டார தமிழரசுக் கட்சியின் வட்டார கிளைக்குழு தலைவராகவும் பிரதேசக்
கிளை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றேன்.

அரசியல் நடைமுறை

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எருவில்
வட்டாரத்தில் போட்டியிட்டு அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான
மக்கள் ஆணையைப்பெற்று சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி கட்சி
வளர்ச்சிக்காகவும் செயற்பட்ட எனக்கு இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில்
தகுந்த காரணங்கள் எதுவுமின்றி மாற்றுக் கட்சியில் இருந்து தமிழரசுக் கட்சியில்
இணைந்த களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளரை தவிசாளர் ஆக்குவதற்கு நான் இடையூறாக
இருப்பேன் என்கின்ற ஒரே காரணத்துக்காக கட்சியின் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக
எனக்கு வேட்பாளராக இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டு இருட்டடிப்புச்
செய்யப்பட்டேன்.

இது சம்பந்தமாக கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும்
அச்சமயம் எழுத்து மூலம் அறிவித்தும் இன்று வரை சம்பந்தப்பட்ட எவரிடம்
இருந்தும் எவ்வித பதிலும் கிடைக்காமல் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளேன்.

அந்த வகையில் அரசியல் நடைமுறைக்கு மாறாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாகவும்
கட்சி செயற்பட்டுள்ளதாலும் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி முரண்பாடுகளினால்
மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதுடன் மக்கள் கட்சியில்
அதிருப்தி அடைந்துள்ளதாலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால
அங்கத்துவத்தில் இருந்தும் கட்சியில் நான் வகித்து வரும் சகல
பதவிகளிலிருந்தும் மிகுந்த மனவேதனையுடன் எனது சுயவிருப்பின் பேரில் பதவி விலகுகின்றேன் என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version