இலங்கையில் ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும்
கலாசாரம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான
தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே – Cafee) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன்
தெரிவித்துள்ளார்.
கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில்18
வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களிற்கான தெளிவூட்டும் நிகழ்வு வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (03) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த 15வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற
நிலவரத்தினையும் பார்க்கும் போது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற ஒரு
சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.
சட்டவிரோத தேர்தல் பிரசாரம்
அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த
பொதுத் தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள்
எவையும் பதியப்படவில்லை. சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை
அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள்
பெரும் பங்கினை வழங்குகின்றது. இவற்றை நாம் கண்காணிக்கும் போது
அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய
போலிப் பிரசாரங்கள், நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.
வன்முறையற்ற தேர்தல்
எனவே அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தக்கூடியவர்களை வரவழைத்து
அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமாணம் ஒன்றை
பெறுகின்றோம்.
ஆகவே சுதந்திரமானதும் நீதியானதுமான நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக
அது வன்முறையற்ற தேர்தலாக இருக்கவேண்டும்.
வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து
அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும், ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என கபே
அமைப்பு கேட்டுக்கொள்கின்றது“ என தெரிவித்தார்.