தமது உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களை கையகப்படுத்துவதற்கான விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 12 முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய குடியிருப்புகளை இதுவரை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
28 இல்லங்கள்
இந்த நிலையில், அரசாங்கத்தினால் முன்னாள் அமைச்சர்களுக்கு 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு, குறித்த குடியிருப்புகளின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் மீண்டும் கையளிக்கப்படும் போது அவற்றை செலுத்திவிட்டு கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது
கையளித்தவர்கள்
இதேவேளை, அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய நான்கு முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, திலும் அமுனுகம, ரமேஷ் பத்திரன மற்றும் அஜித் ராஜபக்ச ஆகியோர் தமது இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்.