பேரிடர் நிலைமையிலிருந்து இலங்கையை மீட்பதற்காக மேலும் 500 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
இதற்கான போதிய நிதி கையிருப்பு அரசாங்கத்திடம் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மூலதனச் செலவுகளுக்காக (வீதிகள், வைத்தியசாலைகள் அமைக்க) 1,400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய இதிலிருந்து நிதியைப் பயன்படுத்த முடியும்.
500 பில்லியன் ரூபாய்
வீடுகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற அன்றாடப் பணிகளுக்காக சுமார் 500 பில்லியன் ரூபாய் மேலதிகமாகச் செலவாகும், அதனை அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியும்.
முதன்மைச் செலவாக 13 வீதத்தை மட்டுமே செலவிட முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை இருந்தாலும், தற்போதைய நெருக்கடியால் இதில் சில தளர்வுகளைப் பெற முடியும்.
மேலும், அரசாங்கத்தின் வசமுள்ள வங்கிக் கணக்குகளில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் உள்ளது.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ நிதியமானது, நாடாளுமன்றத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டரீதியான நிதியமாக இருக்க வேண்டும். இந்த நிதியம் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை, தனியார் துறையினரின் பங்களிப்பையும் இதில் பெற்றுக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.
