கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை மற்றும் உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று(11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு விசாரணையைக் கைவிட்டு உயர்நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிறி பண்டித்தரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மற்றுமொரு தினத்தை வழங்குமாறும் சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய, வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.