பண்டிகை காலத்தில் நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நீர்நிலைகளின் தன்மை மற்றும் ஆழம் மாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீர்நிலைகளின் கட்டமைப்பு மாற்றம்
தற்போதைய நாட்களில் நிலவும் அனர்த்த நிலைமையுடன் நீர்நிலைகளின் கட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. அவற்றின் தரைப்பகுதி மற்றும் ஆழம் மாறுபட்டுள்ளது.
எனவே, இவ்வாறான இடங்களைப் பயன்படுத்தும் போது எப்போதும் அவதானமாக இருங்கள். உங்களுக்குத் தெரியாத நீர்நிலைகளில் இறங்கி நீராடவோ அல்லது அதனை பயன்படுத்தவோ முன்னதாக, அங்கிருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சில வேளைகளில் பழைய இடங்களாக இருந்தாலும், அனர்த்தங்களுக்குப் பிறகு அவற்றின் ஆழம் அதிகரித்திருக்கக்கூடும்.
இதேவேளை, பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதால், அது தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து
கடந்த சில வருடங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், குறிப்பாக சாரதிகள், வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாகவே பெரும்பாலான வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைவரும் தமது வாகனங்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு முன்னர், அவை சரியான இயங்கு நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
