கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மைலத்தமடு, மாதவனை பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள்
தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைத் தரப்போகின்றார்களா? என இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஞானமுத்து சிறீசேன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்களின்
கருத்துக்களை அறியும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல்
“ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான விடயம் இப்போது படிப்படியாக சூடு
பிடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தமிழர்கள் பலவிதமாக சிந்தித்துக்
கொண்டிருக்கின்ற வேளையில் பலவிதமான கேள்விகளையும் எங்களை நோக்கி வருகின்றன.
அந்த வகையில் கடந்த காலத்தில் 8 ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் விரும்பியோ
விரும்பாமலோ சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இருக்கின்றோம்.
அது விருப்பமாக
இருக்கலாம் விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் முதல் தடவையாக தமிழ் பொது
வேட்பாளர் என்கின்ற சிந்தனையை 83 சிவில் சமூக கட்டமைப்புகள் கொண்டு
வந்திருக்கின்றது.
தமிழ் பொது வேட்பாளர்
அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை களத்தில் இறக்கி இருப்பதோடு
மட்டுமல்லாமல் இதனோடு தமிழ் தேசியக் கட்சிகள் ஏழு கட்சிகள் பயணிப்பதாகவும்
குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இந்த வேளையில் கட்சி அரசியலுக்கு அப்பால் இப்போது இலங்கை தமிழரசுக் கட்சி
இன்னும் முடிவு சொல்லவில்லை. என்றாலும் யாரையும் எதிர்க்கின்ற தன்மையை அவர்கள்
ஏற்படுத்தி கொள்ளவில்லை.
யாரை ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக
முடிவெடுக்கவில்லையே தவிர யாரையும் எதிர்க்கச் சொல்லி அவர்கள் முடிவு
சொல்லவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன” என்றார்.