Courtesy: Sivaa Mayuri
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையானது, பாரிய ஊழல் மற்றும் நிதி ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொலையின் பின்னரான அரசியல் கருக்கலைப்பு என சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், குறித்த கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குற்றச்சாட்டு கடிதம்
ஜனநாயகத்தைக் கலைத்ததற்கு விலை கொடுங்ங்கள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த “பொருளாதார தாக்குதலுக்கு” எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கும் என்பதை, தமது கட்சி எதிர்பார்த்து காத்திருப்பதாக, அந்த கடிதத்தில் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாம் வீணடித்த மக்களின் வரிப்பணத்தை மீள வழங்குவதன் மூலம், அரசியல் வரலாற்றில், நாகரீகமானதும் தார்மீகமானதுமான அத்தியாயத்தை சேர்ப்பதற்கு, அவருக்கு போதிய கால அவகாசம் எஞ்சியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.