Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் (Elizabeth K. Hors) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடமே எலிசபெத் இநத விடயத்தைக் கூறியுள்ளார்.
நிலையான முன்னேற்றம்
தமது பதவி உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் உள்ள விளிம்புநிலை மக்களின் உறுப்பினர்களுக்கான பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நல்லிணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி ஆகியவற்றை ஆதரிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு இலங்கை ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. அந்த உறவு 76 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்துள்ளது.
அத்துடன், அமெரிக்க – இலங்கை உறவின் மூன்று முக்கிய தூண்களில் கவனம் செலுத்தவுள்ளதோடு நமது பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பாதுகாப்பு நலன்களை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் துடிப்பான மக்களுடன் நமது உறவுகளை ஆழப்படுத்துதல் என்பவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரிலிருந்தும் 2022 அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் மீண்டுள்ள இலங்கை குறிப்பிடத்தக்க உள்ளக மற்றும் வெளிப்புற சவால்களுக்கு முகங்கொடுத்து தொடர்ந்து நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.