Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி

முல்லைத்தீவில் தனித்து விடப்பட்ட பாலம்: பராமரிப்பு இல்லாத சூழலில் புனரமைப்பு ஏன் என மக்கள் கேள்வி

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் போக்குவரத்துப் பாதை ஒன்றில் அமைக்கப்பட்ட பாலம் தனித்து விடப்பட்டுள்ளது.வீதிக்கு குறுக்காக அமைக்கப்படும் பாலமாக இருந்து போதும் வீதியின் குறுக்கே பாலம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.

இரண்டு கிலோமீற்றர் நீளமான பாதையொன்றில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தால் வீதி அரிக்கப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சரியான திட்டமிடல் இல்லாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என அப்பகுதி மக்களில் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கணுக்கேணிக் குளத்தின் இடதுகரை வாய்க்காலுக்கு அருகாக செல்லும் இந்த பாதை பிரதேச அபிவிருத்திக்கு முக்கியமான பாதையாகவும் இருக்கிறது.

வீணடிக்கப்படும் பணம் 

வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பல பாலங்கள் பாரியளவிலான சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.அவற்றுக்கூடாக நீர் பாய்ந்து செல்லாது வீதிக்கு மேலாக பாய்ந்து செல்லும் அவல நிலையில் இருக்கின்றன.

மேட்டு நிலத்தில் இருந்து வரும் வெள்ள நீரோட்டத்தின் மேலாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதியின் திரும்பம் ஒன்றில் தனித்து விடப்பட்ட இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகமான நீரோட்டத்தினை எதிர்கொண்டு நிற்கும்படி பாலம் கட்டப்படவில்லை என பொதுமக்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பாலம் அப்படியே கீழறங்கிக் கொள்ள அதன் மீது போடப்பட்ட கிரவல் மண் அவ்வளவும் நீரினால் அரிக்கப்பட்டுள்ளது.பாதையின் பக்கத்தில் பாலத்தின் இரு பக்கங்களிலும் பாரிய குழி தோன்றியுள்ளது.

பாதையில் பயணிக்கவே பாலம் தேவையாக உள்ள போதும் இப்போது பாலத்துக்கு போகவே இன்னொரு பாலம் போட்டுத் தான் போக வேண்டும் என விவசாயிகள் பலர் தெரிந்தமையும் நோக்கத்தக்கது.

பாலத்தினை கட்டும் போது அதனூடாக பாய்ந்து செல்லும் நீர் பாதையின் மண்ணினை அரித்துச் செல்லாதவாறு பலமான தடுப்பணை இடப்பட்டிருக்க வேண்டும் என இந்த பாலத்தின் நிலை தொடர்பில் துறைசார் நிபுணர் ஒருவருடன் கேட்ட போது தெரிவித்தார்.

பொது மக்கள் சொல்வது போல் தொடர் பாவனைக்கு ஏற்றபடி இல்லாத அபிவிருத்திச் செயற்பாடுகள் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயனற்றதாகவே போகும்.இத்தகைய உறுதியற்ற கட்டுமானங்களால் நிதி மட்டுமே வீணாக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இடதுகரை வாய்க்கால் 

கணுக்கேணிக் குளத்தின் இடதுகரை பிரதான வாய்க்கால் புனர்நிர்மாணம் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவு, முல்லைத்தீவு மாவட்டம்.

இத்திட்டமானது புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பினால் (IOM) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப அனுசரணையுடனும் அவுஸ்ரேலிய சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் (AusAid)நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது என விவரிக்கப்படும் பிரதான வாய்க்கால் ஒன்றிற்கான பாதையாகவும் இந்தப் பாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.

கணுக்கேணிக் குளத்தின் இடது கரையில் இருந்து குமுழமுனை தண்ணீரூற்று பிரதான வீதியை இணைக்கும் படி இந்தப் பாதை அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களினூடாக பயணிக்கும் இந்த வாய்க்காலும் அதனுடன் இணைந்த பாதையும் சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீள் பராமரிப்பற்ற அபிவிருத்தி

மீள் பராமரிப்பு இல்லாத அபிவிருத்திகள் தேவையற்றவையாகும் என சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்படும் நிதியை பயனுடைய முறையில் செலவழித்தல் என்ற அடிப்படையில் அந்த அபிவிருத்தி தொடர்பான சரியான மீள் பராமரிப்புத் திட்டம் அவசியமாகும்.

அவ்வாறு மீள் பராமரிப்புத் திட்டம் இல்லாத அபிவிருத்திச் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது போய்விடும்.இதனால் அவை நீண்ட காலத்திற்கு பயனுடையதாகவும் இருக்கப் போவதில்லை.

அபிவிருத்தித் திட்டமிடலின் போது அபிவிருத்திச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தும் வேளை அதனை கண்காணித்து அதன் நிலைத்திருக்கும் தன்மையிலான அபிவிருத்தியை உறுத்திப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்தோடு அபிவிருத்தியினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை நீண்ட காலத்திற்கு பாதுகாத்துக்கொள்ள சிறந்த பராமரிப்பு முறை ஒன்றை பிரதேச மக்களுடன் இணைந்ததாக உருவாக்கி கொள்ளும் போது குறைந்த செலவில் மீள் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.

மீண்டும் மீண்டும் அபிவிருத்தி என செலவழிக்கும் நிதியை புதிய உட்கட்டுமானங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இதனால் வழியேற்படும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version