இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau of Foreign Employment) மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் (Israel) வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலில் தொழில் எதிர்பார்த்து பணம் செலுத்தியுள்ளவர்கள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா (Gamini Senarath Yapa) தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்புகள்
அடையாளம் தெரியாத நபரொருவரிடம் இருந்து இஸ்ரேலில் வேலை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் 14,700 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (21) பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையிலே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்த அறிவிப்பை விடுத்திருந்தது.
இதேவேளை நாட்டில் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.