Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு

நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு

0

நுவரெலியாவில் (Nuwara Eliya) முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனமானது இன்று (14) நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது இந்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

இந்த வாகனம் பல வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது முன்பக்க இலக்கத்தகடு இன்றியும் பின் பகுதியில் மாத்திரம் இலக்கத்தகடு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜீப் வாகனமும் மற்றுமொரு ஜீப் வாகனமும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியின் பாவனைக்காக அமைச்சரினால் வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருப்பினும், இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஜீப் வண்டியை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/another-royal-vehicle-discovered-in-nuwara-eliya-1728895155

NO COMMENTS

Exit mobile version