Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவில் (Mullaitivu) தண்ணிரூற்று – குமுழமுனை வீதியின் பராமரிப்பற்ற நிலை தொடர்பில் உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரியளவில் சேதமடைந்து பயணிக்க முடியாதளவுக்கு மோசமான நிலையில் இருந்த இந்த வீதி நெடுநாட்களாக விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்தே அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.
இப்போது காபற் வீதியாக உள்ள இந்த வீதி பராமரிப்பற்ற நிலையில் இருப்பது தொடர்பில் பொதுமக்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்துகின்றனர்.
வீதியின் தொடர் பராமரிப்பு தேவையானதும் அவசியமானதும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தேவையான பராமரிப்பு
வீதியின் இரு புறங்களிலும் தொடர்ச்சியாக இடப்பட்டிருக்க வேண்டிய வெள்ளை நிறக்கோடுகள் தொடர்சியாக இடப்பட்டிருக்கவில்லை.
அவ்வெள்ளைக் கோடுகள் வீதியில் இடையிடையே இடப்பட்டுள்ளன, பாதையின் முழுமையான அபிவிருத்தியில் குறையை ஏற்படுத்தியவாறு இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தோடு பாதசாரிகள் கடவைகள் தேவைப்படும் இடங்களில் இதுவரை அதனை இட்டு அந்தக் குறை நிரப்பப்படவில்லை. 10 கிலோமீற்றர் நீளமான இந்த வீதியில் ஒரு இடத்தில் மட்டுமே பாதை சாரிகள் கடவை உள்ளது. ஆயினும் இன்னும் பல இடங்களில் அது தேவையாக இருப்பதை அப்பாதையினை பயன்படுத்தி வரும் மக்கள் பலரும் குறிப்பிட்டு கருத்துரைத்து உள்ளனர்.
வீதியில் இரு மருங்கிலும் காபைற்று விளிம்பினை மூடி இட வேண்டிய மண் காப்பை சரியான முறையில் வீதியில் முழு நீளத்திற்கும் இட்டிருக்காத நிலையினையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது மழைகாலங்களில் வீதியில் ஏற்படும் மண்ணரிப்பினால் வீதியின் கட்டமைப்பு பாரியளவிலான சேதத்தினைச் சந்திக்கும் வாய்ப்புக்களை அதிகமாக்கி விடும்.
நீண்ட காலத்திற்கு பயன்படுத்த வேண்டிய வீதி இவ்வாறான பராமரிப்பற்ற நோக்கினால் விரைவில் சேதமடைந்து சிதைந்து போகும் துர்ப்பாக்கிய நிலையை எதிர்கொள்ளவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவை தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அகலக் காடாக்கல்
காட்டுப் பகுதிகளினூடாக செல்லும் பிரதான போக்குவரத்து பாதைகளில் வீதியின் இரு பக்கங்களிலும் அகலமாக காடுகளை வெட்டி இடமெடுத்தலை அகலக்காடாக்கல் என குறிப்பிடும் பழக்கம் வன்னி வாழ் மக்களிடம் உண்டு.
இவ்வாறான செயற்பாடுகளால் காட்டு விலங்குகள் வீதிக்கு வருவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தண்ணீரூற்று – குமுழமுனை வீதியில் முறிப்பில் இருந்து குமுழமுனை மகாவித்தியாலயம் வரையான பகுதிகள் வீதியின் இரு பக்கங்களிலும் பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளன.
இவற்றினால் நடுவீதியினூடாக பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. வீதியில் இடது பக்கமாக பயணிக்கும் போது திடீரென எதிர்வரும் வாகனங்களை எதிர்கொண்டு, சுதாகரிக்க முடியாத சூழலில் விபத்துக்குள்ளான நாட்களும் உண்டு என இந்த வீதியின் அகலக்காடாக்கலின் தேவை குறித்து ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
வீதியில் இடையிடையே சில காணி உரிமையாளர்கள் தங்களின் காணிகளுக்கு முன்னுள்ள வீதியின் ஓரங்களைத் துப்பரவு செய்துள்ள போதும், ஏனையவர்கள் அது தொடர்பில் கவனமெடுக்காது இருந்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதியின் ஒரு பகுதியில் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு தேக்கம் காட்டினையும் அதற்கு அடுத்த பக்கத்தில் முறிப்பு முஸ்லிம் குடியிருப்புக்களையும் கொண்டதாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
உடன் நடவடிக்கைகள் தேவை
போராடி பெற்ற அபிவிருத்தியாக தண்ணிரூற்று குமுழமுனை ஊடாக அளம்பில் சந்தி வரையான பத்துக் கிலோமீற்றர் நீளமான காபைற் வீதி இருப்பதாக குமுழமுனை வாழ் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும் அந்த அபிவிருத்தி முழுமை பெற்றதாக உணரமுடியவில்லை.பல இடங்களிலும் உள்ள முடிக்கப்படாத வேலைகள் ஒரு பக்கம் இருக்க அபிவிருத்தியின் பின்னரான பராமரிப்பு வேலைகளும் முன்னெடுக்கப்படாத ஒரு சூழலில் இந்த வீதி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களமும் பிரதேச செயலகமும் கரிசனை கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாது போனால் விரைவாக இந்த வீதி சேதமடையும் ஒரு அசௌகரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
சேதமடைந்த பின்னர் மீள் செப்பனிட முயற்சிப்பதை விட சேதமடைய முன்னரே அதனை பராமரிப்பதில் கவனமெடுப்பதே புத்திசாலித்தனமான ஆரோக்கியமான முடிவாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டும் வரை அதிகாரிகள் அக்கறையற்று இருந்துள்ளனர் என்பது வருத்தத்துக்குரிய விடயம்.ஆயினும் அதன் பின்னரும் பாராமுகமாக அவர்கள் இருப்பது பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடாக இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது.