ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்மந்தமாகவோ, அதிகாரப் பகிர்வு சம்மந்தமாகவோ தனது கொள்கை விளக்கவுரையில் எதுவும் சொல்லவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
பத்தாவது நாடாளுமன்ற அமர்வின் முதலாவது நாளான நேற்று (21) ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி நேரடியாக தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்மந்தமாகவோ, தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்மந்தமாகவோ, அதிகாரப் பகிர்வு சம்மந்தமாகவோ, பொறுப்புக் கூறல் விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தொடர்பாகவோ சொல்லவில்லை.
ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடல்
கடந்த கால ஜனாதிபதிகள் இவ்வாறான விடயங்களை செய்தியிலே சொல்லியிருந்தாலும் கூட நடைமுறையிலே எதுவும் செய்யவில்லை.“ என சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன் இஙகு கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் (T. Raviharan), ”வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் சம்பந்தமான கூடுதலான கருத்துக்கள் ஜனாதிபதியின் உரையில் சொல்லப்படவில்லை.
இருந்தாலும் வெகு விரைவில் ஜனாதிபதியையும் பிரதமரையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருக்கின்றோம். அப்போது மிகுதி விடயங்களை கலந்துரையாட இருக்கின்றோம்.“ என அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), ”புதிய ஜனாதிபதியினுடைய உரை வரவேற்கத்தக்கது. கூடுதலாக எங்களுடைய விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் கவனம் செலுத்தியுள்ளார்.
இருந்நதாலும் இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தை கதைக்கவில்லை என்றவொரு கவலை இருக்கின்றது. அதைவிட நாட்டை முன்னேற்றகரமாக கொண்டு செல்லக்கூடிய உரையாக இருக்கின்றது. அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம்.” என தெரிவித்தார்.