மட்டக்களப்பு – பாலமீன்மடு கிராமத்தில் 90 வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதும் மாநகரசபை உறுப்பினர் வழங்கிய 25 குடும்பங்களின் பெயர்
பட்டியலுக்கு மாத்திரம் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 25
குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொய் கூறுமாறு பிரதேச
செயலாளர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கிராம சங்கங்களின்
தலைவர்கள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீடு சுத்தப்படுத்த 25 ஆயிரம் ரூபா நிதி
ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண கடற்றொழில் தொழிற்சங்கத்தின்
தலைவர் இ.பத்மநாதன், பிரஜா சக்தி கிராம தலைவர் தேவிபாலா மற்றும்
வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் ஒன்றிணைந்து இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் சிறிய மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் ஒரு சிறிய கிராமம்
பாலமீன்மடு கிராமம். இந்த கிராமம் உன்னிச்சையில் குளத்தில் இருந்து மற்றும்
அம்பாறை மாவட்ட குளங்களில் இருந்து வரும் வெள்ளநீர் பாலமீன்மடு கிராமத்துக்கு
ஊடாகத்தான் கடலுக்கு வழிந்தோடுகிறது.
இவ்வாறு இந்த கிராமம் பெரும்
வெள்ளத்தில் பாரிய அனர்த்தத்தை சந்தித்தது.
இந்த கிராமத்தில் 410 குடும்பங்கள் இருக்கின்ற போதிலும் 90 வீதமான
குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை
பதிவிடுவதாக கிராம உத்தியோகத்தர் 11ஆம் திகதி பதிவுகளை மேற்கொண்டார்.
இவ்வாறு 11 திகதி பதிவுகளை மேற்கொண்டவர் பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கும் நிதி
வழங்காமல் இந்த பதிவு இடம்பெறும் முன்னர் தமிழரசு கட்சியின் மாநகர சபை
உறுப்பினர் தான் உட்பட 25 நபர்களுடைய பெயர் பட்டியலை வழங்கியுள்ளார்.
இந்தப் பட்டியலுக்கு அமைவாக வீடு சுத்தப்படுத்த 25 ஆயிரம் ரூபா நிதி
வழங்கப்பட்டுள்ளது. இது பாரிய மோசடியான விடயம். இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு
கொண்டு வருகின்றோம்.
கொழும்பு சென்று ஜனாதிபதியிடம் முறைப்பாடு
நாங்கள் 14ஆம் திகதி ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்பு கொண்ட போது
உடனடியாக பிரதேச செயலாளரை தொலைபேசியில் இணைத்து இவ்வாறு ஒரு முறைப்பாடு
வந்துள்ளதாக தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு
அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிரகாரம் திங்கட்கிழமை பிரதேச செயலாளரை காரியாலயத்தில் சந்தித்த போது
அவர் எங்களை ஏன் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். என்னிடம் வந்திருக்க வேண்டும்
என்பதுடன் 310 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிதியை யாரிடம் இருந்து
பெற்று வழங்குவது என கூறியதுடன் பாலமீன்மடு கிராமத்தில் 25 குடும்பங்கள்
மட்டுமே பாதிக்கப்பட்டதாக எங்களை பொய் கூறுமாறு பிரதேச செயலாளர்
சொல்லுகின்றார்.
ஜனாதிபதி பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விடுபடக்கூடாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உரிய முறையில் நிதியை வழங்குங்கள் போதியளவு நிதி உள்ளதாக சொல்லுகின்றார்.
எனவே உண்மையில் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு குறித்த நிதியை பெற்று தர
நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் கொழும்பு சென்று ஜனாதிபதியிடம்
முறையிடுவோம் அல்லது பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கூட்டாக எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
