முழுக் கத்தோலிக்க சமூகத்தையும் அநுர அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பில் நேற்று (01.11.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்து போயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து
புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள்
மூலம் இதை விடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற
எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
கட்சியின் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டே நாட்டுக்காக ஒன்றுபட வேண்டிய
இடத்தில் ஒன்றுபடுவதும், இணைந்து பணியாற்ற வேண்டிய இடத்தில் இணைந்து
பணியாற்றுவதும் முக்கியமானதாக அமைந்து காணப்படுகின்றன.
ஐந்தரை வருடங்களேயான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது 1773 உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்களையும், 39 உள்ளூராட்சி தவிசாளர்களையும், 21 பிரதித்
தவிசாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள 340 உள்ளூராட்சி
மன்றங்களில் 100இற்கும் மேற்பட்டவற்றின் தவிசாளர் பதவி எதிர்க்கட்சிகளால்
கைப்பற்றப்பட்டுள்ளன.
சுபச் செய்தி
ஜனாதிபதி பதவியையும், நாடாளுமன்றப் பெரும்பான்மை, பெரும்பாலான உள்ளூராட்சி
மன்றங்களின் அதிகாரமும் அரசிடம் இருக்கும் போது, இன்று அரசாளுகை இயலாமையால்
வீழ்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
தற்போதைய அரசு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த
அரசு முழு சமூகத்தையும் ஏமாற்றியுள்ளது. ஏப்ரல் மாதம் ஆகும் போது உயிர்த்த
ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாகச் சுபச் செய்தி ஒன்றைச் சொல்வோம் என அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், இதுவரை அந்தச் சுப செய்தி வெளிவரவில்லை.
தற்போதைய அரசு முழுக் கத்தோலிக்க சமூகத்தையுமே ஏமாற்றியுள்ளது. உயிர்த்த
ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான தகவல்களை இந்த அரசும் மறைப்பது பெரும்
பிரச்சினையையாகக் காணப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
