Home இலங்கை அரசியல் அநுர தரப்பு தொடர்பில் ரணில் கூறிய உண்மை! குடும்ப பிரச்சினையை தீர்க்க சிஐடிக்கு விஜயம்

அநுர தரப்பு தொடர்பில் ரணில் கூறிய உண்மை! குடும்ப பிரச்சினையை தீர்க்க சிஐடிக்கு விஜயம்

0

தங்களது குடும்ப பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கும் அநுர அரசாங்கம் சிஐடியை பயன்படுத்திக் கொள்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்த அரசாங்கத்தை ஒரு எல் போர்ட் அரசாங்கம் என்று ரணில் கூறியது உண்மைதான் என்றும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் குறிப்பிட்டோம். இதற்கு அரசாங்கம் பதிலளிக்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது.

என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இவ்விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கடந்த வாரம் முன்னிலையாகி வாக்குமூலமளித்தேன்.

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்களை கொண்டு எம்மை நெருக்கடிக்குள்ளாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடு வெட்கக்கேடானது.

இந்த அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் திருட்டு கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டம் தொடர்பில் உண்மை வெளிவந்ததன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்தார்கள்.

ஆளும் தரப்பின் உறுப்பினரது குடும்ப பிரச்சினைக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றார்கள். தம்மை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை ஆளும் தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பிலும் சர்ச்சை

ஜனாதிபதி அனுமதியில்லாமல் முறைகேடான வகையில் கைதி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை வெளிவந்துள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு 10 நாட்களுக்குள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையன்று பொதுமன்னிப்பு வழங்க வேண்டிய கைதிகளின் விபரங்களை சிறைச்சாலை தலைமையகம் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கும், நீதியமைச்சு அந்த பெயர் பட்டியலை பரிசீலனை செய்து, அதில் ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா என்பதை ஆராயும், அதன் பின்னர் அந்த பெயர் பட்டியல் அறிக்கை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி செயலகத்தில் அந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் அறிக்கை சிறைச்சாலை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆகவே இது பரந்துப்பட்டதொரு செயற்பாடாகும்.

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது.

இந்த அரசாங்கம் ‘எல் போர்ட்’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து இன்று உண்மையாகியுள்ளது. இவர்கள் வாய்ச்சொல் வீரர்களே, தவிர செயல் வீரர்களல்ல, தான்தோன்றித்தனமாக செயற்படுவது மாத்திரமே அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version