கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகிக்கும் அரசாங்க வைத்திய உத்தியோகத்தர் என்ற ரீதியில், தனது பொறுப்புக்களை மீறி செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் ஊடகங்களுக்கு அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை தொடர்பில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி நீக்கம்
அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக்குழுவின் செயலாளரின் உத்தரவுக்கு அமைய பதவி நீக்க கடிதம், உரிய நபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பதவி நீக்கப்பட்ட வைத்தியரின் வசம் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏதேனும் பொருட்கள் இருந்தால், அவற்றை இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் ஒருவரிடம் ஒப்படைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணி இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும், வசிப்பிடத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன அறிவித்திருந்தார். .
ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவை பெற்ற வைத்தியர், தனது நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
முன்னாள் ஜனாதிபதியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அவருக்கு உயிராபத்தான நிலையில் உடல்நிலை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
