வடக்கு கிழக்கில் கடையடைப்பை முன்னெடுத்ததன் மூலம் அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையில் உள்ள பாரிய ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக்கட்சிக்கு நன்றி கூறுகின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் (M.K.M ASLAM) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”வடக்கு, கிழக்கில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தை தமிழ் சமூகம் தோல்வியடைய செய்துள்ளது. யாழில் கடையடைப்பு தோல்வியடைந்ததால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வவுனியாவுக்கு சென்று மூக்கை உடைத்துக்கொண்டு வந்தார்.
போராட்டத்தை முடிவுறுத்திய சிறீதரன்
இலங்கை தமிழரசுக் கட்சியினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சிறீதரன் எம்.பி முற்பகல் 10 மணியளவிலேயே அந்த போராட்டத்தை முடிவுறுத்தியுள்ளார்.
கடையடைப்பு விடயத்தில் யாழ். மாநகர சபை முதல்வரும் மட்டக்களப்பு மாநாகர சபை முதல்வரும் நடந்து கொண்ட முறை கேவலமானதாக இருந்தது. இவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.
தமது அதிகார பிரதேசங்களில் கடைகளை மூடுமாறு பலவந்தமாக கூறினர். சிலர் அச்சத்தில் கடைகளை மூடிய நிலைமை காணப்பட்டது. அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தது. ஏன் இவ்வாறு கூறினர் என்று தெரியவில்லை.
அதேபோன்று மனோகணேசன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அவ்வாறு ஆதரவளிப்பதாக கூறியிருந்தனர். இந்த கடையடைப்பு புனிதமான நோக்கத்துடன், இலங்கையில் மக்களுக்கு நடந்த பாரிய அநியாயத்திற்கு எதிரானவொன்றாக செய்யப்பட்டது என்று இவர்கள் நினைக்கின்றார்களா?
மக்கள் மிகத் தெளிவாக, புத்தியுடன் செயற்பட்டு தமிழரசுக் கட்சியையும், முஸ்லிம் காங்கிரஸையும் புறக்கணித்துள்ளனர். இந்த கடையடைப்பு என்ன நோக்கத்திற்கானது? தமிழரசுக் கட்சி தமது அரசியல் நோக்கத்திற்காக இந்த போராட்டத்தை திட்டமிட்டது.
பிள்ளையான் மற்றும் கருணா அம்மானின் செயற்பாடுகள்
இந்த அரசாங்கம் இனவாதத்தை எதிர்க்கின்றது. இனவாதத்தை தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என்று அரசாங்கம் உறுதியாக கூறுகின்றது. நாங்கள் மிகத் தூய்மையாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசியல் செய்கின்றோம்.
இதனால் இந்த கடையடைப்பு ஏனைய சமுகத்தினருக்கும். ஏனைய பிரதேசங்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி மகிந்த ராஜபக்சவின் கட்சியை போன்றது என்று சுமந்திரன் கூறுகின்றார்.
ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சி அன்று பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் முன்னெடுத்த செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாகவே பார்க்கின்றோம். அவர்களுக்கு தேவையென்றால் கடையடைப்பை செய்யுமாறு கூறுவார்கள்.
கடையடைப்புக்கு செல்ல காரணமான சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏன் இந்த அரசியல் நாடகம்? இலங்கை தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன இருப்பை இழந்து வருகின்றன.
ரிஷாத் தலைமையிலான கட்சி இதனை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் மக்களுடன் இருக்கின்றது. மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையில் இருக்கின்ற பாரிய ஆதரவும் இந்த மூலம் வெளிப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை ஏற்படுத்திய கடையடைப்பு ஏற்பாடு செய்த தமிழரசுக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றிகளை கூறுகின்றோம் என்றார்.