அரச வங்கிகளில் பெற்ற கடனை செலுத்தாமல் உள்ள இலங்கையின் கோடீஸ்வர வர்த்தக பெரும் புள்ளிகளின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாலைதீவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தின் போது மாலைதீவில் வதியும் இலங்கை பிரஜைகளை சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சில வங்கிகள் சாதாரண மக்களின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஈடுபடும் போது அரசியல் பின்புலம் உள்ளவர்களை பாதுகாத்துள்ளது.
நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உயர் சம்பளத்தில் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்களை நியமிக்க உள்ளோம்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பெரும் தொகையான கோப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கங்கள் மாறும் போது கோப்புக்கள் மேலும் கீழுமாக சூழ்கிறது.
அந்த கோப்புக்கள் அனைத்தையும் நாம் விசாரிக்க இருக்கின்றோம். கடந்த காலங்களில் பழிவாங்கல்ளில் வெளியேற்றப்பட்ட மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகளை நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மீள நியமித்துள்ளோம்.அவர்கள் மூலம் விசாரணைகளை முன்கொண்டு செல்வோம்.
20 வருட சிறைத்தண்டனை
பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
சிலரின் மோசடிகளை நாம் கணக்கு பார்த்தால் இரண்டு மூன்று ஜென்மங்கள் வேண்டும். தண்டனையை அனுபவிக்க.
எமது நாட்டில் நீதியை முடக்கி வைத்திருந்தனர்.
கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் அரசியல்வாதியொருவர் கைது செய்யப்பட்டால் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.
அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மாற்றப்பட்டிருப்பார்.
இவ்வாறே சட்டத்தை அரசியல் ஆக்கி வைத்திருந்தனர்.
ஊழல் மோசடியை முற்றாக ஒழிப்பது மட்டுமல்ல கையூட்டல் என்ற வார்த்தையை கதைக்க பயப்படும் இலங்கையை நாம் உருவாக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
