Home இலங்கை அரசியல் பொறுப்புக்கூறலைக் கொடுக்க விரும்பாத அனுரவிடமிருந்து உள்ளுர் பொறிமுறை

பொறுப்புக்கூறலைக் கொடுக்க விரும்பாத அனுரவிடமிருந்து உள்ளுர் பொறிமுறை

0

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபை
அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது
தேசிய மக்கள் சக்தியின் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பாற்பட்ட ‘அதிகாரப்
பகிர்வை உள்ளடக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட
நல்லாட்சி அரசியலமைப்பு சீர்திருத்தச் செயற்பாடு கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு
வந்த பின்னர் ஸ்தம்பிதமடைந்தது.
நாங்களும் அந்த செயற்பாட்டில் ஒரு பகுதியாக இருந்தோம். 

மீண்டும் சக்கரத்தை
சரிசெய்ய வேண்டிய அவசியமில்லை. அந்தப் பயிற்சியின் அடிப்படையில் நாங்கள்
முன்னோக்கிச் செல்வோம்.” என இந்தியாவில் வெளியாகும் தி ஹிந்து பத்திரிகைக்கு
அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பொறிமுறைகள்

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு வழங்கப்படும்
முன்னுரிமை அந்த அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பௌத்த பிக்குகள் மாநாட்டில்
உறுதியளித்திருந்தார்.

தமிழ் மக்கள் பதினைந்து வருடங்களாகக் கோரி வரும் பொறுப்புக்கூறல், உண்மை
மற்றும் நீதிக்காக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரித்த உள்ளூர்
பொறிமுறையை அநுர குமார திசாநாயக்க முன்மொழிகிறார்.

“உள்ளூர் பொறிமுறைகளை நம்பகத்தன்மையுடனும் முழுமையானதாகவும் ஆக்குவதன் மூலம்
தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே எமது இலக்காகும். முன்னைய அரசாங்கங்கள்
உண்மையை மறைப்பதிலும், பணியை தாமதப்படுத்துவதிலும் உறுதியாக இருந்தன.”

யுத்தத்தின் இறுதிக் காலத்தில் போர்க்களத்தில் செயற்பட்ட ஜெனரல்கள் உட்பட,
கடுமையான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நம்பகமான
ஆதாரங்களைக் கொண்ட உயர் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய, தேசிய மக்கள்
சக்தியின் ஓய்வுபெற்ற இராணுவக் குழு உத்தேச உள்ளூர் பொறிமுறைக்கு எவ்வாறான
பங்களிப்பைச் செய்யும் என்பது தெரியவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை

எவ்வாறாயினும், “பொறுப்புக் கூறுதல் என வரும்போது, அது பழிவாங்கும் ஒரு
வடிவமாக இல்லை” என அவர் முன்னதாக அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியிருந்தார்.

யுத்தக் குற்றச் சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள எவரும் தமது அரசாங்கத்தினால்
தண்டிக்கப்படமாட்டார்கள் என, அனுர குமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
உறுதியளித்த போதிலும் அதற்கு கால அவகாசம் தேவைப்படலாம் என ஜனாதிபதி வேட்பாளர்
அனுர குமார திஸாநாயக்க தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சியானது நாட்டின் தேர்தல் முறை மற்றும் சட்ட முறைமையுடன்
நெருங்கிய தொடர்பு இருப்பதே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version