மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நீண்ட
காலம் ஆட்சியில் நீடிக்காது. இந்த அரசாங்கத்தின் ஆயுள் மிக விரைவில் முடிவுக்கு
வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பொய்களைக் கேட்டுக் கேட்டு இன்று மக்கள்
பொறுமை இழந்துவிட்டனர் என்பதை அமைச்சர் லால் காந்த நன்கு அறிந்து
கொண்டிருக்கின்றார்.
அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு
தொடர்ந்தும் பொய்களைக் கூறிக் கொண்டு நாட்டை
நிர்வகித்துச் செல்ல முடியாது என்பதை இப்போதாவது அரசாங்கம் உணர வேண்டும்.
பொய்களுக்கு ஆயுள் குறைவு என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பே அரசுக்குப் பாரிய சுமை எனத் தேசிய மக்கள்
சக்தி பரவலான பிரசாரங்களை முன்னெடுத்தது.
ஆனால், இன்னும் குறுகிய காலத்தில்
அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எவரும் தனித்து வீதியில்
செல்ல முடியாத நிலைமை ஏற்படும். எனவே, அவர்கள் முன்னரை விடத் தமக்கான
பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போது ஒரு கட்டத்தில் அவர்கள் வீதிக்கு
இறங்குவதைத் தவிர்க்க முடியாது.
உகண்டாவில் பதுக்கி வைத்திருக்கும் அரசின் நிதி
கடந்த ஆட்சிக் காலத்தில் செவனகல சீனி தொழிற்சாலைக்காகக் குரல் கொடுப்பதாகக்
கூறி லால் காந்த, சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அன்று இவ்வாறு முதலைக்கண்ணீர் வடித்தவர்கள் இன்று அதனைச் சிறிதும்
பொருட்படுத்தாமல் உள்ளனர்.
9 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் அரசின் இயலாமையை மக்கள் உணர்ந்து
கொண்டுள்ளனர்.
பல அரசியல்வாதிகள் அரசின் நிதியை உகண்டாவில் பதுக்கி
வைத்திருப்பதாகக் கூறினர். ஆனால், இன்று வரை அரசால் அதனை நிரூபிக்க முடியாது
போயுள்ளது.
அரசில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளனர். டட்லி சிறிசேனவைக்
கண்டு அஞ்சுகின்றனர். மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசு நீண்ட காலம்
ஆட்சியில் நீடிக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
