Home முக்கியச் செய்திகள் நண்பராக இருந்தாலும் ரணிலுக்கெதிராக விசாரணைகளை நடத்துவோம் : அநுர உறுதி!

நண்பராக இருந்தாலும் ரணிலுக்கெதிராக விசாரணைகளை நடத்துவோம் : அநுர உறுதி!

0

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) தனது நண்பராக இருந்தாலும் 21ஆம் திகதி ஆட்சிக்கு வந்ததும் மத்திய வங்கியில் நடந்த கொள்ளை பற்றி முறையான விசாரணைகளை நடத்துவோம் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

புத்தளம் (Puttalam) நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அநுர, “எல்.ஆர்.சி காணிகளை பங்கிட்டமை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், மதுபானசாலைகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்போம்.

மகிந்த ராஜபக்ச

நண்பன் என்று மகிந்த ராஜபக்சவையும் (Mahinda Rajapaksa), சஜித் பிரேமதாசவையும் (Sajith Premadasa) சமாளிக்க முடியும். ஆனால், ரணில் விக்ரமசிங்கவினால் எங்களை சமாளிக்க முடியாது. அந்த ஆட்சியாளர்களினால்தான் இன்று எமது நாடு இந்தளவு மோசமான அளவு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. 

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்க 12.5 பில்லியன் வரை செலுத்த முடியாத அளவு கடனைப் பெற்றுள்ளார். அதுபோல ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்து ஒரு பில்லியன் டொலரையும் பெற்றுக்கொண்டார்.

எமது ஆட்சியில் இதுபற்றியும் தேடி முறையான விசாரணைகளை முன்னெடுப்போம். இன்று போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் தாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

ரணிலை வெல்ல வைத்தல் 

யாருடைய தயவிலும் எமக்கு வாக்கு தேடும் நிலையில் எமது கட்சி இல்லை. 21ஆம் திகதி திசை காட்டி சின்னத்திற்கு நீங்கள் வாக்களியுங்கள். இந்த நாட்டை நாங்கள் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை நாம் பெற்றுக்கொடுப்போம்.

இலங்கை (Sri Lanka) வரலாற்றில் மக்கள் நல்ல தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஒருபக்கம் மகிந்தவை வெல்ல வைப்பதற்காகவும், அடுத்த முறை ரணிலை வெல்ல வைப்பதற்காகவும் மாத்திரமே முயற்சிகள் எடுக்கப்படும்.

ஆனால், இந்த முறைதான் அந்த இரண்டு பேரின் கைகளில் இருந்த அதிகார பலத்தை தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு எடுக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.“ என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version