Home இலங்கை சமூகம் சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள்

சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள்

0

சிறிலங்கா இராணுவத்தை பொறுப்புக் கூறவைக்கும் வகையில் பொருத்தமான சர்வதேச நீதி பொறிமுறையை (ICC ) பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த விடயத்தை இது தொடர்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு முன்வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று சர்வதேச சிறுவர்கள் தினமாகும் உலகெங்கும் வாழும் சிறுவர்களிடையே புரிந்துணர்வையும் பொதுநிலைப்பாட்டையைம் ஏற்படுத்தும் நோக்கிலேயே 1954 ஆம் ஆண்டு UNICEF அமைப்பால் சிறுவர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

மனித உரிமை

அத்தினத்தில் சிறுவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் நடாத்தியும் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்வித்தும் இந்நாள் சர்வதேசத்தால் கொண்டாடப்படுகிறது இன்று சிறுவர்தினம் மட்டுமல்ல முதியோர் தினமும் இன்றாகும்.

முதியவர்களும் அன்றைய தினம் அவர்களின் கடந்த கால சேவைக்காகவும் அவர்களின் ஆற்றல் அனுபவம் என்பவற்றிற்காகவும் கௌரவப்படுத்தப்படுவதோடு மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பல நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன. 

ஆனால் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிறுவர்களதும் முதியவர்களதும் நிலை எப்படி உள்ளது என்பதை unicef போன்ற UN அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் சிந்திக்கின்றனவா ?

இறுதி யுத்த நேரத்தில் பாலுக்கும் கஞ்சிக்கும் வரிசையில் நின்ற எத்தனை சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் எறிகணைகளாலும் கொத்துக்குண்டுகளினாலும் உடல் சிதறி பலியானார்கள் ? எத்தனை பேர் ஊனமுற்று நடைப்பிணமாகி சிறிது சிறிதாக இறக்கிறார்கள் என்பது புரியுமா ? இதுமட்டுமா, குடும்பத்தலைவன் சரணடையும் போது அவர்களின் பாதுகாப்பிற்காகவே சேர்ந்து சரணடைந்த மனைவிமார் தங்கள் பிள்ளைகளுடனேயே சரணடைந்தார்கள்.

சரணடைந்த கைக்குழந்தைகள் 

அப்படி சரணடைந்த கைக்குழந்தைகள் உள்ளிட்ட 29 சிறுவர்களின் விபரங்களை கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுவர் தினத்தன்று வெளியிட்டிருந்தோம்.

இந்த விபரங்கள் பன்னாட்டு தூதுவர்களுக்கும் கையளிக்கப்பட்டு வருகின்றது ஆனால் இதுவரை எவரும் இக் குழந்தைகள் தொடர்பில் அக்கறை எடுத்ததாக எமக்கு தெரியவில்லை.

இந்தப் பிள்ளைகளுக்கும் இந்த பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வயோதிபப் பெற்றோருக்கும் இன்றைய தினம் மகிழ்ச்சியை யாரால் கொடுக்கமுடியும் ? இவர்களிற்கு நிம்மதி என்பதே இல்லாமல் போய் 15 வருடங்களாகி விட்டன.

நிம்மதி இல்லாமலேயே 250 இற்கு மேற்பட்ட பெற்றோர்கள் இறந்துவிட்டனர் ஏன் எவராலும் இறந்து கொண்டிருக்கும் எமக்கு எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லமுடியவில்லை ? அனைத்து உள்ளூர் பொறிமுறையிலும் நம்பிக்கை இழந்த நாங்கள் சர்வதேச நீதியில் மட்டுமே நம்பிக்கை கொண்டு சர்வதேசத்தையே எதிர்பார்த்து நிற்கிறோம்.

சர்வதேச நீதி 

எமது உறவுகள் சரணடைந்த பிரதான இராணுவ காவலரண்களிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் விசாரித்தால் அவர்கள் எமது பிள்ளைகளை எங்கு எவரிடம் ஒப்படைத்தார்கள் ? அல்லது அவர்களை என்ன செய்தார்கள் என்பதை அறிய முடியும்.

சர்வதேச நாடுகளும் ஐ.நா சபையும் இணைத்து இதை செய்வார்களா ? அப்பொழுதுதான் எமக்காவது இறப்பதற்குமுன் பிள்ளைகளின் நிலை தெரியவரும். செய்வார்களா? 

ஆணையாளர் அவர்களே !, கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட46/1 தீர்மானத்தின் பிரிவு 8 இன்படி ஐ.நா ஆல் ஆவணம் திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா வின் அமைப்பானது போதியளவு ஆவணங்களைத் திரட்டியுள்ளது.

பல்வேறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எமது உறவுகளில் அநேகர் தமது சாட்சியங்களை விரும்பி பதிவு செய்தனர் அவர்கள் (SLAP) தமது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர் அந்த அறிக்கையும் சர்வதேச நீதி பொறி முறையையே பரிந்துரை செய்துள்ளனர்.

பல்வேறு அறிக்கை

அத்துடன் ஐ.நா ஆல் அறிக்கை இடப்பட்ட ருஸ்மான் அறிக்கை உள்ளன பல்வேறு அறிக்கைகளும் போதியளவு ஆதாரங்களை முன்வந்துள்ளன ஆகவே திரட்டப்பட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் உட்படுத்த போதுமானது. 

அத்துடன் முன்னாள் ஐ.நா ஆணையாளர் மிசேல் பசேலெட் (Michelle Bachlet) அம்மையார் அவர்கள் பெப் 2021 அறிக்கையில் சிறிலங்கா விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்தும் பரிந்துரையை வழங்கி இருந்தார்.

அந்த பரிந்துரையை ஐ.நாவின் 26 முன்னாள் ஆணையாளர்களும் வழிமொழிந்திருந்தனர் எனவே மீண்டும் புதிய தீர்மானங்களைக் கொண்டு வருவதிலும், பின் அவற்றிற்கென கால நீடிப்புகளை வழங்குவதிலும் கால விரயங்களைச் செய்யாது சிறிலங்காவை பொறுப்புக் கூறவைக்கும் வகையில் பொருத்தமான சர்வதேச நீதி பொறிமுறையை (ICC ) பிரயோகித்து எங்களுக்கான நீதியை நாம் உயிருடன் இருக்கும் போதே பெற்றுத்தாருங்கள். 

எமது உயிரிலும் மேலான உறவுகளை பறிகொடுத்துவிட்டு வயதான காலத்திலும் நீதி கேட்டுப்போராடும் நாம், சர்வதேச நீதி பொறிமுறை தவிர்ந்த எந்த சமரசத்தையும் ஏற்றுகொள்ளமாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version