Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை – சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை – சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

0

அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (19.03.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

வெறுப்புப் பேச்சுகள்

அத்துடன் அர்ச்சுனாவின் வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எனக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதை இந்த சபைக்கு அறியத் தருகின்றேன்.

குறிப்பாக இந்த உயரிய சபைபயை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உரித்தாகி இருக்கின்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இந்த சபைக்கு வந்து பதிலளிக்க முடியாத தரப்பினர் தொடர்பாகவும், இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகவும், மற்றும் பல்வேறு வெளி சமூக அமைப்புகள் மற்றும் சமய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் குழுவினரை இலக்கு வைத்து மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய அவதூறான கருத்துக்கள் தொடர்பில் அதிருப்தியை வெளியிடுகின்றேன்.

சபாநாயகர் உத்தரவு

இவ்வாறான கருத்துக்களை தவிர்க்குமாறு உரிய உறுப்பினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் எனது அறிவுரையை கேட்டு நடப்பதற்கு தவறிவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கள் தொடர்பில் தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற் கொண்டு 2025 மார்ச் மாதம் 20,21,ஏப்ரல் மாதம் 08,09,10, மே மாதம் 06,07,08 ஆகிய நாடாளுமன்ற அமர்வு நாட்களில் நாடாளுமன்றில் வெளியிடும் அர்ச்சுனாவின் உரைகளை சமூக ஊடகங்களிலோ நேரடியாகவோ ஒளிபரப்புவதை இடைநிறுத்துமாறு நான் உத்தரவு பிறப்பிக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/TF8NCDXhwXohttps://www.youtube.com/embed/goPpZI5pEt4

NO COMMENTS

Exit mobile version