ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம்
நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,
பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம்
திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
மனுத்தாக்கல்
ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்
அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை
அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார்
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண
வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் இடம்பெற உள்ளது.
