பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையிலே நிரந்தர அரசியல் தீர்வை
முன்வைப்பதற்கான ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது
என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(07) பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த தேர்தலின் ஊடாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம்
சர்வதேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் அயல் நாடான இந்தியாவுக்கும் ஒரு
செய்தியை சொல்ல இருக்கின்றோம்.
கடந்த 75 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட இனம் இனியும்
ஏமாறுவதற்கு தயார் இல்லை என்பதே ஆகும்.
ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட உள்ள அந்த தென்பகுதியைச்
சேர்ந்தவருக்கு தாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கின்றோம் என்ற
மனசாட்சி அவர்களுக்கு உறுத்தும்.
பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையிலே நிரந்தர அரசியல் தீர்வை
முன்வைப்பதற்கான ஒரு நடவடிக்கையை அவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
அதற்கு அப்பால் சிதறி கிடக்கின்ற எமது தமிழ் தேசிய கட்சிகளை ஒரு குடையின் கீழ்
கொண்டு வருவதற்கு ஒரு முன்னேற்பாடாகவும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு எடுத்து
இருக்கின்ற முயற்சி என்பது பயனளிக்கும்.
ஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விடயம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே பலருக்கு வாக்களித்து இருக்கின்றோம், பேசியிருக்கின்றோம், ஏமாந்தும்
இருக்கின்றோம்.
ஆகவே இம்முறை நாங்கள் கூறுகின்ற விடயம் ஜனாதிபதியாக ஒரு தமிழர்
ஜனாதிபதியாக வர முடியாது என்றாலும் கூட எம்மை புறக்கணித்து 13 வது அரசியல்
திருத்தத்தை கூட செய்யாது, யுத்த குற்றத்திற்கு சர்வதேச விசாரணை செய்யாமல்
உள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.