துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்
படையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அம்பாறையில் தமன பொலிஸ் பிரிவின்
ஹிங்குரான பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி ஹிரண பிரதேசத்தில் ஒருவரைச் சுட்டுக்
காயப்படுத்திய சம்பவம் தொடர்பிலும், பாணந்துறை பொலிஸ் பிரிவில் மற்றொரு நபரைச்
சுட்டுக் கொல்லத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பிலும் மேற்படி சந்தேகநபர்
தேடப்பட்டு வந்தார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 13 கிராம் எடையுள்ள ஹெரோயின்
கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹிங்குரான பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
இந்த விடயம் தொடர்பில் தமன மற்றும் ஹிரண பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாணந்துறை
பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
