Home இலங்கை அரசியல் அறுகம்பை கடற்கரை விவகாரம் : கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்

அறுகம்பை கடற்கரை விவகாரம் : கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்

0

அறுகம்பை கடற்கரை (Arugam Bay Beach) பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஒக்டோபர் 07ஆம் திகதிக்கு முன்னர் தகவல் கிடைத்த போதிலும், தற்போதைய அரசாங்கம் செயற்படாமல் இருந்தமை குறித்து முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் இன்று (24) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட இடுகையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் “தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு அரசாங்கம் ஏன் விளக்கமளிக்கவில்லை.

தேசிய பாதுகாப்பு

தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, சுற்றுலா வருமானம் நாட்டின் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும்.   

அரசாங்கத்திடம் முன்கூட்டியே தகவல் இருந்திருந்தால், இராஜதந்திர தூதரகங்களுக்கு விளக்கியிருந்தால், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயண ஆலோசனை எச்சரிக்கையை தடுத்திருக்கலாம்.

அரசாங்கம் தற்போது இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

விசேட அதிரடிப்படை

தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும் மற்றும் இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்க வெளிநாட்டு தூதரகங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.“ எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ நேற்றையதினம் (23.10.2024) தெரிவித்திருந்தார்.

இதன்படி அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version