Home இலங்கை அரசியல் ஊடகவியலாளர் மீதான தாக்குதலின் பின்னணியில் பொன்சேகா! உறுதிப்படுத்திய மகிந்த

ஊடகவியலாளர் மீதான தாக்குதலின் பின்னணியில் பொன்சேகா! உறுதிப்படுத்திய மகிந்த

0

2009ஆம் ஆண்டு தன்மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலையீடு இருந்தததை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருந்ததாக ரிவிர பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இணையத்தள கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி காரில் சென்றுகொண்டிருந்த போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மீண்டும் தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளை தடுத்த மைத்திரி

எனவே, 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி அவர் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார்.

இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னர் தன்னை இலங்கைக்கு அழைத்த மகிந்த, தாக்குதலை நடாத்திய சரத் பொன்சேகா தற்போது பதவியில் இல்லை என சுட்டிக்காட்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கான விசாரணைகளை தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மங்கும் நம்பிக்கை

அதே சமயம் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மணி நேரம் தன்னை திட்டிய சம்பவத்தையும் தென்னகோன் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் சில உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தொடங்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தான் உட்பட ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீதியை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பார் என தான் நம்புவதாகவும், ஆனால் அந்த நம்பிக்கைகள் இப்போது மங்கி வருவதாகவும் அவர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version