வடக்கு – கிழக்கில் தொடரும் கன மழையினால் பல பிரதேசங்கள் வெள்ள நீர் மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச்
சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/68 கிராம சேவகர்
பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேரும், ஜே/69 கிராம சேவகர் பிரிவில்
ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 49 வீடுகளும்
பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தொடர்ச்சியான கனமழை
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்
பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான
அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன், மன்னார் மாவட்டத்திலும் தொடர்ச்சியான கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா
வவுனியா – பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான்
கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை
தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது.
இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன்
பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.
பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன்
நான்கு வான் கதவுகள் 6 அங்குலத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும்
வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர்,
கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய
பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க
வேண்டும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நெளுக்குளம் – நேரியகுளம் வீதி ஊடாக பயணிப்பவர்களும் அவதானமாக
போக்குவரத்தை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய
நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 9 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள
வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள
குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள நவகிரிகளம், புனானை அணைக்கட்டு, வடமுனைகுளம்,
வெலியாகண்டிய குளம், றூகம்குளம், வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற
குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்த குளங்களின் தேவைக்கு
ஏற்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குளங்கள், நீர் நிலைகள்,கடல் மற்றும் ஆறுகளில் நீராடுவதை தவிர்க்குமாறும் மீன்பிடி
நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமான செயற்படுமாறும் மாவட்ட இடர் அனர்த்த
முகாமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது.