நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இன்று
(26) வரைக்கும 623 குடும்பங்களை சேர்ந்த 1789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதி பணிப்பாளர்
கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.
இதில் சேருநுவர பிரதேச செயலக பகுதியில் 26 குடும்பங்களை சேர்ந்த 69 நபர்களும்,
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 440 குடும்பங்களை சேர்ந்த 1152
நபர்களும், தம்பலகாமம் பிரிவில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 40
நபர்களும், வெருகல் பிரதேச செயலக பிரிவில் 01 குடும்பத்தை சேர்ந்த 2
நபர்களும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 148
குடும்பங்களை சேர்ந்த 526 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 177
குடும்பங்களைச் சேர்ந்தோர் உறவினர்களின் வீடுகளிலும், 19 குடும்பங்கள் இடைத் தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய இணைப்பு
திருகோணமலையில்(Trincomalee) நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை சுமார் 86
குடும்பங்களைச் சேர்ந்த 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையினால் தாழ் நிலப்பகுதிகளில்
வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த
பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், கிண்ணியா, தம்பலகாமம், புல்மோட்டை மற்றும் குச்சவெளி உட்பட பல
பிரதேசங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்
அத்துடன், திருகோணமலை நகரசபையின் செயலாளர் தே. ஜெயவிஷ்ட்ணு திருகோணமலை நகரில்
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நீரை வடிந்தோடச் செய்வதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
மேலும், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.
எச் முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை
வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை கிண்ணியாவில் முன்னெடுத்து வருகின்றனர்.