Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் வெட்டு: இறுதி கட்டத்திற்கு வந்த தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் வெட்டு: இறுதி கட்டத்திற்கு வந்த தீர்மானம்

0

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும், முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலமானது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இன்று(07) சமர்பிக்கப்பட்டது.

சமர்பிப்பதில் சிக்கல்

கடந்த ஜூலை 31 ஆம் திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முன்மொழியப்பட்ட சட்டம், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்திர கொடுப்பனவுகள், செயலக உதவி, போக்குவரத்து வசதிகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை ரத்து செய்யும்.

எனினும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான நாட்கள் நிறைவடையாததால், இன்று (07) சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது, “இந்த சட்டமூலத்திற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால் சரியான முன்னுதாரணத்தை அமைக்க நீங்கள் செய்வது முறையாக செய்யப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்திருந்தார். 

நடைமுறைத் தடை

அரசியலமைப்பின் 78 வது பிரிவின்படி, ஒரு சட்டமூலம் அதன் முதல் வாசிப்புக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாக வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும், இதனால் பொதுமக்கள் ஆய்வு மற்றும் சாத்தியமான சட்ட ஆட்சேபனைகளை அனுமதிக்க முடியும்.

எவ்வாறாயினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் நாணயக்கார மற்றும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ஜூலை 30 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னர் வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும், அதற்கான காலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதன்படி, சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கு எந்த நடைமுறைத் தடையும் இல்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version